×

உத்திரமேரூரில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கலெக்டர் நேரில் திடீர் ஆய்வு

உத்திரமேரூர்: உத்திரமேரூரில் இயங்கி வரும் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கலெக்டர் கலைச்செல்வி மோகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உத்திரமேரூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் மூலம் விவசாயிகள் உற்பத்தி செய்யும் நெல், நிலக்கடலை, உளுந்து போன்ற வேளாண் உற்பத்தி பொருட்கள் நல்ல விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன்மூலம், இடைத்தரகர்கள் தலையீடு தவிர்க்கப்பட்டு தரத்திற்கு ஏற்ப நல்ல விலை விவசாயிகளுக்கு கிடைக்கிறது. இதில், முதற்கட்டமாக இ-நாம் எனும் மின்னணு வேளாண் சந்தை மூலம், ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு வரப்படும் விளைபொருட்களின் ஈரப்பதம், கலப்பு வகை, தரம் ஆகியவை கண்டறியப்பட்டு வலைதளம் மூலம் பதிவேற்றப்படுகிறது. இதன்மூலம் எந்த ஒரு வர்த்தகரும் ஏலத்தில் கலந்துகொண்டு நல்ல விலை விவசாயிகளுக்கு வழங்கிட ஏதுவாகிறது.

இந்நிலையில், உத்திரமேரூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தினை காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்விமோகன் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது, இ-நாம் திட்ட செயல்பாடுகள், நெல்வரத்து மற்றும் இதர பணிகளை நேரடியாக ஆய்வு செய்து, நெல் விற்பனைக்காக கொண்டுவந்துள்ள விவசாயிகளிடம் உற்பத்தி செலவு மகசூல் கிடைக்கும் விலை விவரம் விவசாயத்தில் உள்ள இடர்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். பின்னர், கலெக்டர் கலைச்செல்வி மோகன், இதுகுறித்து திணையாம்பூண்டி கிராமத்தை சேர்ந்த விவசாயி ஒருவரிடம் கேள்வி எழுப்பியனர்.

அப்போது, விவசாயி கூறுகையில், ‘ஒழுங்குமுறை விற்பனை கூடம் மூலமாக சரியான எடை, நிறைவான சேவை, எந்த கமிஷனும் இல்லாத நிலையில் விரைந்து பண பட்டுவாடா செய்யப்படுவது என் போன்ற விவசாயிகளுக்கு மன நிறைவை தருவதாக கூறினார். மேலும், வேளாண் துறை அலுவலர்களிடம் அனைத்து கிராம விவசாயிகளிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்தி அதிக விவசாயிகள் பயனடைய நடவடிக்கை எடுக்க கலெக்டர் அறிவுறுத்தினார். மேலும், நபார்டு திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் சேமிப்பு கிட்டங்கு பணியினை ஆய்வு செய்த கலெக்டர், பணிகளை தரமானதாகவும், விரைந்து முடிக்கவும் உத்தரவிட்டார். நிகழ்வின்போது வேளாண்மை துணை இயக்குநர் (பொருப்பு) சீனிராஜ், உத்திரமேரூர் ஒழுங்குமுறை விற்பனை கூட மேற்பார்வையாளர் யுவராஜ், மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் பிரின்ஸ்கிளமன்ட், துணை இயக்குநர் ராஜ்குமார், உதவி இயக்குநர்கள் சரவணன், முத்துலட்சுமி, வேளாண்மை அலுவலர்கள் விஜயலட்சுமி தீபா, பிரபாகர், வார்டு உறுப்பினர் தனசேகரன் உட்பட பலர் உடனிருந்தனர்.

* காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரேஷன் கார்டு குறைதீர் முகாம்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் வரும் 10ம் தேதி ரேஷன் கார்டு குறைதீர் முகாம்கள் நடைபெறவுள்ளது என்று கலெக்டர் கலைச்செல்வி மோகன் தெரிவித்தார். காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: காஞ்சிபுரம் மாவட்டத்தில் வரும் 10ம் தேதி காலை 10 மணிக்கு ரேஷன் கார்டு குறை தீர்க்கும் முகாம் நடைபெறுகிறது. அதன்படி, காஞ்சிபுரம் வட்டத்தில் கீழம்பி, உத்திரமேரூர் வட்டத்தில் பாலேஸ்வரம், வாலாஜாபாத் வட்டத்தில் இளையனார்வேலூர், ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில் மாம்பாக்கம், குன்றத்தூர் வட்டத்தில் புதுப்பேர் ஆகிய கிராமங்களில் ரேஷன் கார்டு குறை தீர்க்கும் முகாம்கள் நடைபெறவுள்ளன.
இதில், மேற்கண்ட கிராமங்களில் வசித்து வரும் பொதுமக்கள் தங்கள் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை, நகல் குடும்ப அட்டை,கைப்பேசி பதிவுமாற்றம் செய்தலுக்கான கோரிக்கை மனுக்களை அளிக்க லாம். மேற்படி, மனுக்கள் மீது உடன் தீர்வு காணப்படும். மேலும் மூன்றாம் பாலினத்தவர், பழங்குடியினர் மற்றும் நரிக்குறவர் சமுதாயத்தினை சேர்ந்தவர்கள் ஏதும் விடுபட்டிருப்பின் அவர்களும், புதிய குடும்ப அட்டைகள் பெறுவதற்குரிய மனுக்களை அளிக்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

The post உத்திரமேரூரில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கலெக்டர் நேரில் திடீர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Uttaramur ,Uthramarur ,Kalichelvi Mohan ,Regulatory Sales Hall ,Dinakaran ,
× RELATED ஐயங்கார்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்க...